தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாலம் அமைத்து தராததைக் கண்டித்து சடலத்துடன் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். முத்தம்மாள்புரம் என்ற கிராமத்திற்கு செல்லக் கூடிய முக்கிய சாலையில் பண்டாரக்குளம் மறுகால் ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஒடையில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் ஊர் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பாலம் கட்டித்தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையால் மீண்டும் அப்பகுதியினர் அவதி அடைந்தனர். சமுத்திரவடிவு என்ற மூதாட்டி இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முடியாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.