பெருந்துறையைச் சேர்ந்த இளங்கோவனின் சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ், தான் ஐஏஎஸ் அதிகாரியாக பணி செய்து வருவதாக கூறி அறிமுகமாகியுள்ளார். சொத்து வழக்கினை முடித்து தருவதாக கூறி 27 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஆனால், வழக்கு ரீதியாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இளங்கோவன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு, ஆனந்த் வைஷ்ணவிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி இளங்கோவன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த மென்பொருள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற ஆனந்த் வைஷ்ணவ், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்த் வைஷ்ணவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.