உலுக்கிய சோளக்கொல்லை பலாத்கார கொலை.."ரத்தக்கறையை கழுவினேன்" அவன் சொன்னதை கேட்டு குலைநடுங்கிய போலீஸ்
சோளக்கொல்லையில் இளம் பெண் கிடந்த கோலத்தைப் பார்த்து ஊர் மக்கள் பதறினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் பெண்ணின் அருகே காய்கறிகள் சிதறிக் கிடந்தன..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் அவரது கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்து இருக்கிறார். இரு பெண் குழந்தைகளை வளர்த்து வந்த நிலையில் விபத்தில் சிக்கி கணவன் உயிரிழந்து விட்டதாக வந்த செய்தி அந்த குடும்பத்தை நிலை குலையச் செய்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தனி ஆளாக நின்று பால் சொசைட்டியில் பால் ஊற்றி தனது இரு பெண் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்த்து வந்து இருக்கிறார் அந்த பெண்...
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி பால் ஊற்றச் சென்ற இளம் பெண் அலங்கோலமாக சோளக்கொல்லை காட்டுக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வந்த செய்தி ஊர் மக்களை பதற்றமடையச் செய்து இருக்கிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலை நடந்து ஆறு நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், காலை நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டர் இரு சக்கரவாகனத்தில் சென்றதாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் ரகசியத் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
உடனடியாக அருகே உள்ள ஊரைச் சேர்ந்த டீ மாஸ்டர் குமரேசனைப் பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தன்று குமரேசன் அவரது நண்பருடன் அமர்ந்து வயல் பகுதியில் மது அருந்தி இருக்கிறார். பின்னர் சிறிது நேரம் குமரேசனுடன் பேசி கொண்டிருந்த அவரது நண்பர் வீட்டிற்குச் சென்று இருக்கிறார்.
தனியாக மதுபோதையில் இருந்த குமரேசன் பார்வை அருகே நடந்து சென்ற இளம் பெண்ணின் மீது பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்.
ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற இளம் பெண் குமரேசனைத் திட்டி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்று இருக்கிறார். தொடர்ந்து தனது இரு சக்கரவாகனத்தில் துரத்திச் சென்று அந்த பெண்ணின் தலையில் கொடூரமாகத் தாக்கியதில் மயக்கம் அடைந்து தரையில் வீழ்ந்து இருக்கிறார்.
குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த பெண் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சி இருக்கிறார்.
அதனைச் சட்டையே செய்யாத குமரேசன் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதன் பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அருகில் ஒடையில் ரத்த கறை படிந்த தனது கையை கழுவிவிட்டு இரு சக்கரவாகனத்தில் சென்றதாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
குமரேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் ஜவுளிக்கடை உள்ளிட்ட பல கடைகளில் வேலை பார்த்து வந்த குமரேசன் கடந்த சில ஆண்டுகளாக டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்து இருக்கிறார்.
கொலையாளி கைது செய்யப்பட்டாலும் கூட, தாயை இழந்த இரு பெண் குழந்தைகளின் தவிப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை..