திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம்... கோயில் முன்பு கண்ட காட்சி - மக்கள் அச்சம்
திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம்... கோயில் முன்பு கண்ட காட்சி - மக்கள் அச்சம்
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு திடீர் கடல் சீற்றம். 50 அடி தூரம் கரைக்கு வந்த கடல் நீரால் பரபரப்பு. 15 தினங்களுக்குள் மீண்டும்?
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். வரக்கூடிய பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் முன்பு இருக்கக்கூடிய கடற்கரையில் புனித நீராடிய பின் முருகனை வழிபட்டு வருவார்கள்.
இந்நிலையில், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆனால் கடந்த நேற்று அமாவாசை தினம் என்பதால் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக மீண்டும் 100 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு உள்ள கடல் திடீரென சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுமார் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும்புகின்றன.
கடலில் இருந்து சுமார் 50 அடிக்கு கரைக்கு கடல் நீர் வந்தது. இதனால் கடற்கரை முழுவதும் கடல் நீர் காணப்படுகிறது. அந்த கடல் நீரில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். ஒரு சில இளைஞர்கள் கரைக்கு வந்த கடல் நீரை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமாவாசை முடிந்தும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு தமிழ் வருடப்பிறப்பு அன்று பௌர்ணமி நாளில் இதே போல் கடல் சீற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று தினங்கள் இதுபோல் மதியம் நேரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டது. தற்போது 15 நாட்களுக்குள் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.