சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, அரசு மருத்துவர், போலீசாரை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
காரிப்பட்டி அருகே, பீரோ பட்டறை உரிமையாளரான வெள்ளியம்பட்டி சரவணன் என்பவர் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக மருத்துவ சான்றிதழ் பெற, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரவுப்பணியில் இருந்த அரசு மருத்துவர் செந்தில்குமார் என்பவர், ஏழு பேரை பரிசோதனை செய்ய மறுத்ததுடன், சேலத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ சான்றிதழ் வாங்கிக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட மருத்துவர், தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. மேலும், மருத்துவரின் நடவடிக்கையை படம் பிடித்த போலீசாரின் செல்போனை பறிக்க முயன்றதோடு, நாக்கை துருத்திக்கொண்டு போலீஸாரை தாக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதுகுறித்து காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர் செந்தில்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.