ராமேசுவரத்தில் ஒரு ஆண்டிற்கு முன் காணாமல் போன மீனவரின் எலும்புகளை சேகரித்து, குற்றவாளிகள் இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
சம்பை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் மாயமான நிலையில், அவரது அண்ணன் குமார் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் கடந்த தீபாவளி அன்று மது போதையில் சக நண்பர்களிடம் விஜயகுமாரை கொலை செய்ததாக உளறி உள்ளார். இது குறித்து முத்துக்குமாருடன் மது அருந்திய நண்பர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் சம்பை அருகே உள்ள வனப்பகுதியில் மது அருந்தியதாகவும், அப்போது விஜயகுமாருடன் தகராறு ஏற்பட்டு அவரை சஞ்சயுடன் சேர்ந்து கட்டி வைத்து அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்... பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மரணமடைந்த விஜயகுமாரின் உடலை வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் வீசியதாகவும், பின்னர் போலீஸார் விசாரணை நடத்தி வருவதை அறிந்ததும் சில நாட்கள் கழித்து பள்ளத்திலிருந்து அழகிய நிலையில் எலும்புகளை எடுத்து கடலில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் சஞ்சய் இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த போலீசார் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் குற்றவாளிகள் குறிப்பிட்டு சொன்ன இடத்திலிருந்து விஜயக்குமாரின் எலும்புகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்...