அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் திரிஷா, குமாரப்பாளைம் பேருந்து நிலையம் அருகே உள்ள கவரிங் நகைக்கடையில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணி முடிந்து, நண்பர் கோகுல் என்பவருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற அரசுப்பேருந்தை கோகுல் முந்திச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், குறுகலான சாலை என்பதால், இருசக்கர வாகனத்திலிருந்து இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி திரிஷா படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு, குமாரப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திரிஷா உயிரிழந்தார். கோகுல் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.