சளி முதல் சர்க்கரை நோய் வரை.. அனைத்திற்கும் ஒரே வீட்டில் தீர்வு - மெய்சிலிர்க்க வைக்கும் தம்பதி
சிவகங்கை அருகே, வீடு முழுவதும் சுமார் 200 வகையான செடி வகைகளை வளர்த்து அசத்தி வரும் தம்பதி குறித்த சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பாக்யா நகரை சேர்ந்தவர்கள் போஸ் மற்றும் ராமுத்தாய் தம்பதி. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இத்தம்பதிக்கு குழந்தையில்லாத நிலையில், செடி கொடிகளையே தங்களது குழந்தையாக எண்ணி வளர்த்து வருகின்றனர்..
அதிலும் இத்தம்பதியர், மூலிகை செடிகள், மலர் செடிகள், என பல ரகத்தில் செடி வகைகளை வளர்த்து வருகின்றனர். சாதாரண சளி, காய்ச்சல், இருமலுக்கு மருத்துவமனை நோக்கி பலர் செல்லும் இக்காலத்திலும், தங்கள் வீட்டில் உள்ள செடிகளை வைத்தே இயற்கை வைத்தியம் செய்து பலனடைகின்றனர்.
வெற்றிலை, செம்பருத்தி, துளசி போன்ற வகைகளும், ரத்தத்தை சுத்தம் செய்ய வல்லாரை, தூதுவளை, ஆஸ்மாவிற்கு திப்பிலி, இருமல், சளிக்கு ஓமவள்ளி, சிறுநீரக கற்களை கரைக்கும் ரணகள்ளி என மொத்தம் 200 வகையான செடிகளை வளர்த்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு கூட அதற்கான மூலிகை செடியை நம்பியுள்ளனர் இத்தம்பதி...
வீடு முழுவதும் செடிகள் படர்ந்து காணப்படும் நிலையில், செடிகளை வளர்ப்பதற்கென பிரத்யேகமாக சொந்த வீடு கட்டியுள்ளதாக நெகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் ராமுத்தாய்...
இது மட்டுமில்லாமல், செடிகளுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் ராமுத்தாய்...
வீட்டில் சாதாரணமாக மரங்கள் இருந்தாலே பூச்சி, புழு வரும், இலை உதிர்ந்து குப்பைகள் சேரும் என மரங்களை வெட்டி வருபவர்களுக்கு மத்தியில் 200க்கும் மேற்பட்ட செடிவகைகளை வீடு முழுவதும் வளர்த்து அதனை பராமரித்து வரும் தம்பதியினரை பலரும் பாராட்டி வருகின்றனர்..