எமன் போல் சரிந்த ராட்சத `பங்கர் டேங்’ - நொடியில் மூச்சை பிடித்த கருப்பு அரக்கன் - மேட்டூர் பயங்கரம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில், ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேரின் உயிர் பறிபோயுள்ளது. என்ன நடந்தது ? பார்க்கலாம் விரிவாக.
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, நாளொன்றுக்கு 19 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு அதன் மூலம் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
840 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை பிரஷர் மூலம் அனுப்பப்பட்டு அதிலிருந்து வெளியேறும் பவுடரை பங்கர் டேங்கில் தேக்கி வைத்து அதன் பிறகு கொதிகலனுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த பங்கர் டேங்க் ஒரு பகுதியில், கிட்டத்தட்ட 8 பேர் பணியாற்றி வந்தபோது திடீரென பங்கர் டேங் சரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
அதில் டேங்கில் இருந்த பெருமளவு நிலக்கரி துகள்கள் கீழே கொட்ட.. அவ்விடமே நிலக்கரி துகள்களால் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
அத்துடன், விபத்தால் சம்பந்தப்பட்ட பகுதியில் தீயுடன் அதிகப் புகை வெளிப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் சுமார் 7 பேர் சிக்கித் தவித்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
துரதிஷ்டவசமாக 2 பேர் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்திற்குள்ளாக்கியது...
இது குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு பதறியடித்து ஓடி வர அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...
இதனால் உள்ளே செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தி, அதிகாரிகளுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
நிலக்கரி குவியலில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுவதால் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், அவ்விடமே பதற்றத்தால் நிறைந்துள்ளது..