அடியோடு மாறும் சென்னை ரூட்.. சிட்டியில் நுழையவும் வெளியேறவும் GST ரூட் இனி தேவையே இல்லை

Update: 2025-01-29 06:44 GMT

செங்கல்பட்டு - தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையை, ஈசிஆர் சாலையோடு இணைக்கும் புதிய சாலை திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

சென்னைக்குள் மட்டுமல்ல, சென்னையை பிற மாவட்டங்களோடு இணைக்கும் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மாறாத காட்சியாகிவிட்டது.

பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக காலையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களாலும், மாலையில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களாலும் ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கும் சூழலே நிலவுகிறது.

தீபாவளி, பொங்கல் விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே அணிவகுக்கும் வாகனங்களால் சாலை ஸ்தம்பிக்கும்.

அச்சரப்பாக்கம், திண்டிவனம், பரனூர் என போக்குவரத்து நெருக்கடி புலம்ப வைத்துவிடும்.

செங்கல்பட்டு-திண்டிவனம் சாலையில் தினசரி 65 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களும், தாம்பரம்-திண்டிவனம் சாலையில் ஒரு லட்சம் கார்களும் கடந்து செல்கின்றன.

நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மதுராந்தகம் கருங்குழியில் இருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரையில் ஈசிஆர் சாலைக்கு புதிய சாலையை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

32 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலையை அமைக்க 80 லட்சம் ரூபாய் செலவில், விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்ய அரசு டெண்டர் விடுத்துள்ளது.

இதனால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே போக்குவரத்து நெரிசல் குறையும். அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை, கொட்டிவாக்கம் என சென்னையின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதி வாகனங்கள் செங்கல்பட்டு - தாம்பரம் சாலையை தவிர்க்கலாம்.

போக்குவரத்து நேரம் குறைவதோடு, காற்று மாசும் குறையும் என்பதால் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாகன ஓட்டிகள் முன்வைக்கிறார்கள்.

ஏற்கனவே ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருவான்மியூர் – அக்கரை ஆறு வழிச்சாலை திட்டம், திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை திட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை வேகப்படுத்தும் வேளையில், ஜிஎஸ்டி டூ ஈசிஆர்-க்கு இணைப்பை ஏற்படுத்தும் கருங்குழி - பூஞ்சேரி புதிய சாலை திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைக்க வரமாக அமையும் என்பதே வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்