தாயை கிணற்றில் தள்ளி விவசாயி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி?
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே, விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாணார்புதூரை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரவணக்குமார் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு சாணார்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரத்தத்துடன் நடந்து சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது தாயார் ராமாயம்மாள், அருகில் உள்ள கிணற்றில் கிடப்பதாக எழுதி காண்பித்துள்ளார். இதையடுத்து சரவணகுமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ராமாயம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். குடிபோதையை கண்டித்ததால் தாயை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்டு சரவணக்குமார் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.