ஆன்லைன் டிரேடிங்கில் சிக்கி பரிதவித்த மாணவன்-யூடியூப் வீடியோ பார்த்து விபரீத முடிவு
கன்னியாகுமரியில், ஆன்லைன் டிரேடிங்கால், மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் - அனுசியா தம்பதியின் மகன் குருநாத், கடந்த மாதம் 24ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிந்துகொள்ள, செல்போன், லேப்டாப் ஆகியவற்றை சோதனை செய்தபோது, ஸ்ரீதரன் - அனுசியா தம்பதி அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதில், ஆன்லைன் டிரேடிங்கில் சிக்கிய மகனை, சைபர் கிரைம் கும்பல் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியதும், இதனால் மனவிரக்தி அடைந்த குருநாத், யூடியூப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்வது குறித்து வீடியோ பார்த்து தற்கொலை செய்து கொண்டதும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல், மகன் மீதே தவறான செய்தி பரப்புவதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.