ஒரே நாளில் சத்து அதிகரிக்க பள்ளியில் மாணவன் எடுத்த முடிவு - செய்தி கேட்டதும் துடித்து போன தாய்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்த பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் மாணவர் எஸ்.கே. வேலாயுதம். 12 வயதான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பள்ளியில் வழக்கம்போல மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. சில மாணவர்கள் மாத்திரையை சாப்பிடாமல் தண்ணீர் குடிக்கும் இடத்தில் வைத்துச் சென்றுள்ளனர். தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த மாணவர் வேலாயுதம், ஒரே நாளில் சத்து அதிகரிக்க வேண்டும் என நினைத்து அங்கிருந்த 15 சத்து மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட தொடங்கிய நிலையில், ஆசிரியர்களுக்கு விவகாரம் தெரியவந்தது. உடனடியாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த பெற்றோர் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் மாணவனை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் மாணவர் உடல்நலம் தேறியுள்ளதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.