சென்னையில், பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை அதிரடியாக சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்த போலீசார், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இரவில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல், ஜி.பி. G.P. ரோடு, மெரினா காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும், கழற்றி வைத்தும் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தேனாம்பேட்டை பகுதியில் காவலர்களைப் பார்த்ததும் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக பைக்கை இயக்கி மோதியதில், தேனாம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர் ரோகித் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதனிடையே, அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 14 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.