சர்வதேச அளவில் பெட்ரோல் பங்குகளுக்கு பயன்படுத்தப்படும் பைப் மற்றும் டியூப்புகளை தயாரிக்கும் பாலிஹோஷ் நிறுவனம், பல நூறு கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கியுள்ளனர். கிண்டியில் உள்ள பாலிஹோஷ் தலைமையகம், அபிராமபுரத்தில் உள்ள நிறுவன இயக்குநரின் வீடு, அலுவலகங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். மதுரவாயல், திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பாலிஹோஷ் உள்ளிட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, தொழில்துறை அமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.