திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம், திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல், சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. படுகாயமடைந்த கௌதமை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த வழக்கறிஞருக்கு சிகிச்சை அளித்ததற்காக, 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால்தான், உடலை ஒப்படைப்போம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால், அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டி, உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.