"வீட்டுக்கடன், மாத சம்பளம் வங்குவோர்..." - நாடே காத்திருக்கும் பிப்.1. - என்ன அறிவிப்பு வெளியாகும்?
"வீட்டுக்கடன், மாத சம்பளம் வங்குவோர்..." - நாடே காத்திருக்கும் பிப்.1. - என்ன அறிவிப்பு வெளியாகும்?
எதிர்வரும் பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்குவோர் எதிர்பார்க்கும் வருமான வரி குறைக்கப்படுமா? என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதில் வருமான வரி செலுத்துவோர் எதிர்பார்ப்பு எல்லாம் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பதே.
தற்போது புதிய வரி முறையில் 3 லட்சம் ரூபாய் வரையில் வரியில்லை. 3 லட்சம் முதல் 7 லட்சம் வரையில் 5%, 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் 10%, 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் 15%, 12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் 20%, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 % வரியாக விதிக்கப்படுகிறது.
இதில் சலுகைகள் காரணமாக 7 லட்சம் ரூபாய் வரையில் வரியில்லை. தற்போது இந்த வரம்பை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது வரிசெலுத்தும் நடுத்தட்டு மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
பழைய வரி முறையில் உள்ள நெகிழ்வுதன்மை புதியவரி முறையிலும் வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது. வருமான வரி நிலையான கழிவை அதிகமாக்க வேண்டும், வீட்டுக்கடன் வட்டிக்கான வரிவிலக்கு புதிய வரி முறையிலும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
அதுபோல் பழைய வரி முறையில் காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் PF பங்களிப்புகளுக்கு ரூ. 1.5 லட்சம் விலக்கு உள்ளதை ரூ. 2.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது.
இதற்கிடையே 10 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு அளிப்பது மற்றும் 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோருக்கு 25% வரி விதிப்பு குறித்து மத்திய அரசு மதிப்பீடு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்படும் 50 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான வருவாய் இழப்பை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பணவீக்கத்துக்கு ஏற்ப வருமான வரி விலக்கு வரம்பை 5.7 லட்சம் ரூபாயாக உயர்த்த உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி அமைப்பு அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. வரிச் சலுகைகள் அறிவிப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து நாட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.