ஆம்ஸ்ட்ராங் வழக்கு - ஹரிஹரனை மற்ற கைதிகளை போல் நடத்த உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஹரனை மற்ற கைதிகளை போல சமமாக நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனவும் தொலைபேசி மூலம் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறி ஹரிஹரனின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ கால் உள்ளிட்ட தொலைபேசி வாயிலாக பேச அனுமதிக்கப்படுவதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி , மற்ற கைதிகளை போல சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் ஹரிஹரனுக்கு அளிக்க புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.