லாரி மீது நேருக்கு நேர் மோதி சிதைந்த ஆம்புலன்ஸ்.. ராமநாதபுரம் அருகே கோரம்
மரைக்காயார் பட்டினத்தை சேர்ந்த அனிஸ் பாத்திமா என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு சொந்தமான தனியார் ஆம்புலன்சில் ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருடன், உறவினர்கள் வரிசை கனி, சகுபர் சாதிக் உள்பட 9 பேர் அந்த ஆம்புலன்சில் பயணம் செய்தனர். வாலாந்தரவை அருகே வந்தபோது, வழுதூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்த லாரி மீது ஆம்புலன்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்சின் முன்பகுதி முழுவதும் நொருங்கி சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய வரிசை கனி, சகுபர் சாதிக் மற்றும் அனிஸ் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். படுகாயங்களுடன் இருக்கையில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்ட போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் அதன் பின்னால் வந்த கார் உள்ளிட்ட வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி சேதமடைந்தன. மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.