ஒரே போட்டியில் மாறிய கணக்கு... சென்னை பிளே -ஆஃப் கனவில் இறங்கிய இடி - சைலெண்டாக ரேஸில் RCB, GT

Update: 2024-05-11 08:55 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அணிகளின் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

புள்ளிப்பட்டியலில் தலா 16 புள்ளிகளுடன் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏறக்குறைய பிளே-ஆஃப் சுற்றுக்குள் கால்பதித்துவிட்டன. இவ்விரு அணிகளும் எஞ்சியுள்ள தங்கள் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே போதும். பிளே-ஆஃப் கதவு திறந்துவிடும்...

14 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் வகிக்கும் ஹைதராபாத்துக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சி இருக்கின்றன. குஜராத் மற்றும் பஞ்சாப்புடன் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வென்றால் ஹைதராபாத் பிளே-ஆஃப் சுற்றுக்குள் சுலபமாக கால்பதித்துவிடும். ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றாலும் பிளே-ஆஃப் வாய்ப்பு அதிகம்.. ஆனால் மற்ற போட்டிகளின் முடிவிற்கு சார்ந்திருக்க நேரிடும்...

12 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கும் சென்னைக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. ராஜஸ்தான் மற்றும் பெங்களூருவை எதிர்கொள்ளவுள்ள சென்னை, இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும்... ஒன்றில் தோல்வி அடைந்தாலும் சென்னையின் பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கிவிடும்.

அதே 12 புள்ளிகளுடன் 5 மற்றும் 6வது இடத்தில் இருக்கும் லக்னோ மற்றும் டெல்லி அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வரிந்துகட்டி நிற்கின்றன. இரு அணிகளுக்கும் தலா 2 போட்டிகள் எஞ்சி இருந்தாலும், இரு அணிகளின் ரன் ரேட்டும் மைனஸில் இருப்பது சிக்கல்... மட்டுமின்றி இவ்விரு அணிகளும் வருகிற 14ம் தேதி நேருக்கு நேர் மோத இருப்பதால் அதிக ரன் ரேட்டில் வெல்லும் அணி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும். அடுத்த போட்டிகளில் சென்னை தோல்வி அடைந்தால் இவ்விரு அணிகளுக்கும் சாதகமாகும்...

10 புள்ளிகளுடன் 7 மற்றும் 8வது இடம் வகிக்கும் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளும் பிளே -ஆஃப் ரேஸில் கணக்கீடுகள் அடிப்படையில் நீடிக்கின்றன. எனினும் இவ்விரு அணிகளுக்கும் வாய்ப்பு மிகக்குறைவு... மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவைப் பொறுத்துதான் இந்த அணிகளின் வாய்ப்பு அமையும்...

8 புள்ளிகளுடன் கடைசி இரு இடங்களில் உள்ள மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், பிளே-ஆஃப் வாய்ப்பை நிர்ணயிக்கவுள்ள எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பது நிச்சயம்.

Tags:    

மேலும் செய்திகள்