எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், வெறுப்பு குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போதிப்பதா? எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிப்பதாகவும், இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், அது அவர்களது தலைவர்களின் நேர்காணலில் இருந்து தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது யோகி ஆதித்யநாத், வெறுப்பு குறித்து தங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? தங்களை விட்டுவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது முரண்பாடல்ல... இது அரசியல் டார்க் காமெடி என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை... திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்... இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல.... இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.