"தமிழக அரசுபள்ளிகளில்வடமாநிலஆசிரியர்கள்?.. பாஜக பிளான் இதுதான்" - கார்த்தி சிதம்பரம்
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களில் இருந்து அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வரக்கூடும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை மத்திய பாஜக அரசு அனுப்பும் என குறிப்பிட்டார்.
40 சதவீதம் தமிழ் மாணவர்கள், தமிழ் பேசுகிறார்களே தவிர, மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்ப மொழியாக இருப்பது வேதனையாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை அடித்து இழுத்து செல்வதை விடுத்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதானவரை இதுபோன்று அடித்து இழுத்து சென்று வீடியோ போட்டிருந்தால், அதனை பார்த்து 4 பேர் திருந்துவார்கள் என தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவதாக மத்திய அரசு கூறினால், அந்த நிதியை எதிர்பார்க்காமல், தமிழக அரசு கல்வித் துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும் என்றும் அவர் கூறினார்.