தமிழக அரசு எடுத்த முடிவு - சட்ட மசோதா நிறைவேற்றம்
கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தாலும் அனுமதி கட்டண அடிப்படையில் நடத்தப்படும், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில், 2017-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி சட்டத்தில் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்தாலும், அனுமதி கட்டணத்துடன் நடத்தப்படும், இசை, நாடகம் மற்றும் காட்சி நிகழ்ச்சிகளுக்கு, கேளிக்கை வரி விதிக்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.
தற்போது, அனுமதி கட்டணம் மீது உள்ளாட்சிகள், 10 சதவீதம் கேளிக்கை வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, திருத்தம் மேற்கொள்ள வகை செய்யும் சட்ட மசோதாவை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. வேல்முருகன் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு இந்த கேளிக்கை வரி பொருந்தாது என்றும், பெரிய பெரிய நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது அதற்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டிய நிலை இருப்பதால் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். இதையடுத்து, இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது