குற்றப்பின்னணி கொண்ட MLAக்கள் - எந்த கட்சி முதலிடம்..? தமிழகத்தின் நிலை என்ன..?

Update: 2025-03-18 16:38 GMT

எம்எல்ஏக்கள் மீதான குற்றப் பின்னணி - ஆந்திரா முதலிடம்

குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏக்கள் கொண்ட மாநில பட்டியலில் ஆந்திராவும், கட்சி ரீதியில் தெலுங்கு தேசமும் முதலிடத்தில் உள்ளது. 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், 4 ஆயிரத்து 92 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஏ.டி.ஆர். நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திராவில் 138 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 79 விழுக்காட்டுடன் முதல் இடத்தில் உள்ளது.

69 விழுக்காடு எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகளுடன், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் உள்ளன. 66 விழுக்காட்டுடன் நான்காம் இடத்தில் பிகாரும், 65 விழுக்காட்டுடன் மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும், 59 விழுக்காட்டுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்திலும் உள்ளது. அதே நேரத்தில், கட்சி ரீதியில், 86 விழுக்காடு எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகளுடன் தெலுங்கு தேசம் கட்சி முதலிடத்தில் உள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் 75 விழுக்காட்டினரும், திமுகவில் 74 விழுக்காட்டினரும், சமாஜ்வாடி கட்சியில் 62 விழுக்காட்டினரும், ஆம் ஆத்மி கட்சியில் 56 விழுக்காட்டினரும், காங்கிரசில் 52 விழுக்காட்டினரும், திரினாமூல் காங்கிரசில் 41 விழுக்காட்டினரும், பாஜகவில் 39 விழுக்காட்டினரும், அதிமுகவில் 23 விழுக்காட்டினரும் குற்ற பின்னணியில் உள்ள எம்எல்ஏக்கள் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்