மலையாள நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன. மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த பிரபல நடிகர் சித்திக் மீதும் புகார் கூறப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்தார். முகேஷ், ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு என முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டதை தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்கம் அதிரடியாக கலைக்கப்பட்டது. தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். தற்போது மலையாள நடிகர்கள் சங்கத்தில் தற்காலிக கமிட்டி செயல்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஜூனில் பொதுக்குழு கூடி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தான் தலைவர் பதவியை மீண்டும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.