ISRO-வா கொக்கா.. விண்வெளியை இறுக பிடித்த `ரோபோட்டிக் கைகள்..' - ஆட்டத்தை தொடங்கிய இந்தியா - அரண்டு போன உலக நாடுகள்
இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ரோபோ சிறப்புற செயல்பட்டுள்ள காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலையில், அதன் செயல்பாட்டை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
விண்வெளி ஆராய்ச்சியில் அசாத்திய சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோ, அடுத்த மைல்கல்லையும் எட்டி உலக நாடுகளுக்கு இடையே கவனம் பெற்றுள்ளது...
கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி 60 ராக் கெட்டில் டாக்கிங் செயற்கை கோள்களுக்கு அடுத்தப்படியாக அனுப்பப்பட்ட 24 உப செயற்கைக் கோள்களும் 355 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
அதில் ஒன்று தான் ஆர்.ஆர். எம். TD எனப்படும் ரோபோட்டிக் கரங்கள்.
ஒரு ரோபோ பூமியில் செயல்படுவதற்கும், ஈர்ப்பு விசை, இயக்க விசை இல்லாத விண்வெளியில் செயல்படுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது...சவாலான காரியமும் கூட...
இந்தியாவின் முதல் ரோபோட்டிக் விண்வெளி திட்டமான இந்த ரோபோ, முதல் கட்டமாக தனது கரங்களைக் கொண்டு பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
இஸ்ரோவால் அனுப்பப்பட்டுள்ள ரோபோட்டிக் கரங்கள், தனது செயல்பாட்டை சிறப்புற தொடங்கியுள்ள நிகழ்வை காணொளியாக வெளியிட்டுள்ளது இஸ்ரோ..
பூமியிலிருந்து ரோபோவை செயல்படுத்தும் திறனும், அதன் மூலம் விண்வெளி பொருட்களை ஆய்வு செய்ய, இந்த ரோபோ முன்னோடியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்திலும் இந்திய தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ கரங்கள் திட்டமிட்டபடி செயலாற்றி இருப்பதால், வருங்காலத்தில் பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கு இது தொடக்கமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் 2035ம் ஆண்டு நிறுவ திட்டமிடப்பட்டுள்ள Bharatiya Antariksh Station போன்ற எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு ஆதாரமாக திகழும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தின் முன்னோட்டமான ஸ்பே - டெக்ஸ் திட்டத்தின் அப்டேட்டையும் இஸ்ரோ வெளியிட்டது
அதன்படி 350 கிலோமீட்டர் உயரத்தில் புவி தாழ்வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும் நிலையில் இரண்டுக்குமான தொலைவு தற்போது 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது ...
விரைவில் டாக்கிங் முறையில் இணைக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது. செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சேசர்( chaser ) மற்றும் டார்கெட் எனும் இரண்டு அமைப்புகள் அதிவேகமாக பூமியைச் சுற்றி வரும் வேளையில், சேசர் அமைப்பு டார்கெட் அமைப்பை துரத்தி விரைவாக அதனுடன் இணையக்கூடிய வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது துரத்தி வருகிறது .
இஸ்ரோவின் டாக்கிங் சோதனை வெற்றிபெற்றால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை அனுப்புவது முதல் இந்தியாவுக்கு விண்வெளியில் தனி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டம் வரை பல திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.