இனி ஜிம்களில் `ஆண்' மாஸ்டர்கள் பெண்களுக்கு பயிற்சியளிக்க தடை?-நாட்டையே திரும்பி பார்க்கவிட்ட செய்தி
பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் ஆண்கள் பயிற்சி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரப்பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள், லக்னோவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.இதில், பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது,
ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டது.
ஒரு பெண் ஒரு ஆண் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற விரும்பினால், அவர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், பயிற்சி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் முன்மொழியப்பட்டது.
முடி திருத்தும் கடைகளில் பெண்களுக்கு பெண்கள் முடி திருத்த வேண்டும் -
பெண்களை ஏற்றிச் செல்லும் பள்ளிப் பேருந்துகளில் ஒரு பெண் ஊழியர் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெண்களை கெட்ட தொடுதலில் இருந்து பாதுகாக்கவும், ஆண்களின் தவறான எண்ணங்களை தடுக்கவும் இந்த பரிந்துரைகள் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இதுதொடர்பாக சட்டங்களை உருவாக்க மகளிர் ஆணையம் மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.