துபாய் கார் பந்தயத்தில் வென்று அசத்திய நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து முடித்த அவர், சினிமா பணிகளுக்கு சிறிய இடைவேளை எடுத்துவிட்டு, தனது ஃபேஷனான கார் பந்தயத்தில் பங்கேற்று மூன்றாம் இடம்பிடித்து அசத்தியிருக்கிறார்..
துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் கலந்து கொள்ள ஓர் அணியை உருவாக்கி அதன் உரிமையாளராக மாறி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார், அஜித்குமார்.
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் காயமின்றி உயிர்தப்பியபோது, அவரது ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள்...
இதையடுத்து குறிப்பிட்ட பிரிவில் மட்டும் அஜித்குமார் பங்கேற்ற நிலையில், 991 பிரிவில் அஜித்குமார் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. மேலும் ஒட்டுமொத்த சுற்றுகளின் முடிவில் அவரது அணி 23-வது இடத்தையும் பிடித்தது..
அதோடு அஜித்குமாருக்கு 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பின்பு தேசியக்கொடியை கையில் ஏந்தி துள்ளி குதித்து ஓடிவந்த அஜித்குமார், தனது அணியை சேர்ந்த சக வீரர்களையும் கட்டிப்பிடித்து கொண்டாடினார்.
தொடர்ந்து களத்தில் இருந்த தனது மனைவி ஷாலினி, மகன் மகள் ஆகியோரை கட்டித்தழுவி தன் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய அஜித்குமார், ரசிகர்களை நோக்கி கைகளால் ஹார்ட்டின் காண்பித்து நன்றி தெரிவித்தார்...
மேலும் கார் பந்தயத்தில் பங்கேற்க அனுமதித்த மனைவி ஷாலினிக்கு நன்றி கூறுவதாகவும் அஜித்குமார் தெரிவித்தார்....
இதையடுத்து தமிழ்நாடு முதல் உலகம் வரை பல்வேறு முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் அஜித்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் மாதவன் நேரடியாகவே சென்று அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தது கவனம் ஈர்த்தது.
பொது இடங்களில் அதிகம் பேசாத அஜித்குமார், கார் பந்தய வெற்றியை துள்ளிக் குதித்து கொண்டாடியது, ரசிகர்களுக்கு அன்போடு அறிவுரை வழங்கியது என அவரை புதிய பரிணாமத்தில் கண்டது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..
இந்த வெற்றியையும் தாண்டி துபாயில் அஜித்குமாரை கண்டதும், ஏராளமான ரசிகர்கள் அளித்த பேராதரவு, கார் பந்தய ஏற்பாட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவின் டேடோனா ரேஸிங் சர்க்யூட்டில், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டிற்கு கிடைத்த வரவேற்பை விட அஜித்குமாருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக, வர்ணனையாளர் சிலாகித்தது தனிக்கதை...
உச்ச நடிகரான விஜய் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து விட்ட நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்ப எல்லா தகுதியும் இருந்தும், அதுகுறித்து எந்த பிரயத்தனமும் செய்யாமல், தனக்கான தனித்துவமான பாதையை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டு மிளிர்கிறார், அஜித்குமார்...
கனவுகளை நோக்கிச் செல்ல ஆயிரம் தடைகள் வரலாம்... ஆனால், வலிமையும், விவேகமும், விடாமுயற்சி இருந்தால், எதையும் தகர்த்தெறியலாம் என்பதை நிரூபித்து, இதயங்களை வென்றிருக்கிறார் AK....