பர்தாவுடன் வீட்டிற்குள் நுழைந்த பெண்... 20 சவரன் நகையுடன் தப்பியோடும் போது விபத்திற்குள்ளான கார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலக்குடியை சேர்ந்தவர் உமர்பாபு. இவரது மனைவியும், குழந்தைகளும் மருத்துவமனை சென்றிருந்ததால் உமர்பாபு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, பர்தா அணிந்த ஒரு பெண் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், வீட்டினுள் நுழைந்து உமர்பாபுவை தாக்கியுள்ளனர். கையில் அரிவாள், துப்பாக்கி வைத்திருந்த கும்பல், உமர்பாபுவை கயிறால் கட்டி வைத்து, வீட்டிலிருந்து 20 சவரன் நகையை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மனைவி, வீட்டினுள் கணவனை கொள்ளையர்கள் தாக்குவதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கும்பல், வீட்டிலேயே ஆயுதங்களை விட்டு காரில் தப்பியுள்ளனர். அப்போது, கார் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், கும்பல் காரை விட்டு இறங்கி தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.