"என் சாவுக்கு இவங்க தான் காரணம்" இறக்கும் முன் பேசிய அதிர்ச்சி வீடியோ - தனியார் நிதி நிறுவன ஊழியர்களால் பறிபோன உயிர்
சேலம் மாவட்டத்தில், கடன் வாங்கிய நபரை, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததால் அந்நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
சேலம் மாவட்டம், கஸ்தூரிபட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சிவஞானபூபதி. இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு, புதிய லாரி வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்காக ஒவ்வொரு மாதமும் 38 ஆயிரம் ரூபாய் தவணை தொகை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக தவணை தொகை செலுத்த முடியாமல் இருந்துள்ளது. இதற்காக, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், சிவஞானபூபதியை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். இவை அனைத்தையும் சிவஞானபூபதி செல்போனில் பதிவு செய்துள்ளார். இச்சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது தற்கொலைக்கு தனியார் நிதி நிறுவனத்தினர் தான் காரணம் எனக் கூறி, வீடியோ பதிவு செய்துவிட்டு விஷம் அருந்தியுள்ளார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.