ஊரே வெள்ளத்தில் மூழ்கி கண்ணீர் விட..கடவுளை காக்க உயிரை விட துணிந்த பெண்..பதற வைக்கும் காட்சிகள்

Update: 2023-07-23 16:40 GMT

கனமழை பெய்துவரும் குஜராத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள வீட்டிற்குள் இருந்து கொண்டு குலதெய்வ சிலையை விட்டுவர முடியாது எனக் கூறி அடம்பிடித்த பெண் மீட்கப்பட்டது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்


குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வெளுத்து வாங்கிய கனமழையால், வீடுகள், பள்ளிகள், சந்தைகள் என அனைத்து இடங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால், குஜராத்தில் மொத்தமுள்ள 206 நீர்த்தேக்கங்களில் 43 நீர்த்தேக்கங்கள் முழுமையாக நிரம்பி வழிவதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடுமையான சேதத்தை சந்தித்துள்ள பகுதிகளில், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்திலுள்ள வந்தலியில், வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதியில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்,

தங்கள் வீட்டு குலதெய்வ சிலையை தனியாக விட்டு வர முடியாது எனக் கூறி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக அந்த பெண்ணை மீட்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற மீட்புப் படையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்...

எக்காரணத்தை கொண்டும், தன்னால் குலதெய்வ சிலையை தனியாக விட்டு வர முடியாது என்று கூறிய அந்த பெண், அதிகாரிகளிடம் அடம்பிடித்துள்ளார்.

இது என்னடா புதுசு புதுசா பிரச்சனைய கிளப்புறீங்க..? தலைக்கு மேல வெள்ளம் போயிட்டிருக்கிற நேரத்துல இதெல்லாம் தேவையா..? என்று Mind Voice-இல் நமக்கு தோன்றினாலும்,

அந்த பெண்ணுடன் சேர்த்து அவருடைய குலதெய்வ சிலையையும் பத்திரமாக மீட்டுச் செல்வதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டபின், அந்த பெண்மணி வீட்டை விட்டு வெளியேற சம்மதித்துள்ளார். இதனை தொடர்ந்து, முகத்தில் புன்னகையுடன் வீட்டை விட்டு சந்தோஷமாக வெளியேறினார் அந்த பெண்.

இந்நிலையில், சாமி சிலையை தோளில் சுமந்தபடி, மீட்புப் படையினர் வெள்ளத்தில் நடந்து வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அந்த பெண்ணும் அவருடைய சாமி சிலையும், பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்