பெற்றோரை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிய போலீஸ்.. நடுரோட்டில் கதறிய பிள்ளைகள் - தென்காசியில் பரபரப்பு

Update: 2023-04-15 02:38 GMT

தென்காசி மாவட்டம் கடையத்தில், கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்வதை எதிர்த்து சிறார்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், பெற்றோரை கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்குவாரிகள், கிரஷர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, கல்யாணிபுரம் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் மகன் அஸ்வின் சுபநாத் மற்றும் பூமிநாத் சகோதரரான சந்திரசேகர் மகள்கள் சுப பிரியங்கா, சுபிதா ஆகிய 3 சிறார்கள், பட்டினப் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், குழந்தைகள் மூவரும், பெற்றோருடன் கடையம் சின்னத்தேர் பகுதி அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதி இல்லை எனக்கூறி பூமிநாத், சந்திரசேகர் உள்பட 3 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தைகள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. வீட்டிலும் குழந்தைகள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை இயற்கை ஆர்வலர்கள் சந்தித்து, பழரசம் வழங்கி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்