டெல்லியில் நாளை அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு -முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரை | Delhi
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் நாளை மாலை நடைபெறுகிறது. பல்வேறு மாநில அமைச்சர்கள், எம்.பி - எம்.எல்.ஏக்கள் காணொலி வாயிலாக கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்., தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார்.