சூர்யகுமாரை விடாமல் விரட்டும் சாபம்.. கடைசி பந்தில் காத்திருந்த அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி, கடைசி பந்தில் திரில் வெற்றியை ருசித்தது.
ஐபிஎல் தொடரின் 16வது ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து மணிஷ் பண்டே 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, யஷ் துல், ரோவ்மேன் பவல், லலித் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் கேப்டன் வார்னர் போராடி அரை சதம் அடித்தார். அக்ஷர் பட்டேலும் அதிரடியாக 54 ரன்கள் விளாச, டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் அதிரடி தொடக்கம் அளித்தனர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்தபோது இஷான் கிஷன் ரன் அவுட் ஆனார்.
இருப்பினும் ரோகித் சர்மாவோடு சேர்ந்து, திலக் வர்மாவும் வேகமாக ரன்களை சேர்த்தால் மும்பை அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒரு கட்டத்தில் திலக் வர்மா 41 ரன்களிலும், சூர்யா குமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் 65 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், கேமரூன் கிரீன் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரின் கடைசி பந்தில் மும்பை அணி 2 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.