டெல்லிக்கு லெட்டர் போட்ட முதல்வர்...1 வாரத்தில் ஆளுநரிடம் தெரிந்த மாற்றம் - அத்தனைக்கும் ஒரே புல் ஸ்டாப்..!

Update: 2023-01-19 13:12 GMT

Full View

தமிழ்நாடு சர்ச்சை குறித்து தமிழ்நாடு ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்....

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும்...அம்மாநில ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது. தமிழகத்திலும் இதே போக்கு நீடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய உச்சம் பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

'தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்' என கூறிய ஆளுநர்... தொடர்ந்து தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து வந்ததே இதற்கு காரணமாக அமைந்தது.

இது இந்த ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்து....தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வரிகளை ஆளுநர் புறக்கணிப்பு....ஆளுநர் உரைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம்... அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்... அதை தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக எழுந்த கோஷங்கள்... என தமிழக அரசியல் களம் பரபரத்தது.

ராஜ்பவனில் இருந்து வெளியிடப்பட்ட பொங்கல் விழா கொண்டாட அழைப்பிதலில், தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என குறிப்பிட்டதும்... தமிழ்நாடு அரசின் சின்னத்திற்கு பதிலாக இந்திய அரசின் சின்னத்தை ஆளுநர் பயன்படுத்தியதும்... திமுகவினரை கொந்தளிக்க செய்தது.

மரபு மீறி செயல்பட்டார் ஆளுநர் என கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக சார்பில் குடியரசு தலைவரை சந்தித்தனர், அக்கட்சியின் எம்பிக்கள்.

இதை தொடர்ந்து, 'மரபுகளை மீறாமல் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுறுத்துங்கள்' என தமிழக முதல்வர் ஸ்டாலினும் தனது பங்கிற்கு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இப்படி இந்த விவகாரம் மேலும் மேலும் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், தற்போது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கமளித்துள்ளார், தமிழக ஆளுநர்.

அதில் காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும்,

தனது பேச்சின் அடிப்படை புரியாமல் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்துகொள்வதோ தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடவே அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என தெரிவித்துள்ள ஆளுநர்.. தமிழ்நாடு குறித்து எழுப்பப்படும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாடு சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே நம்பலாம்.




Tags:    

மேலும் செய்திகள்