ஆபாச வகுப்பு நடத்தியதாக கைதான ஆசிரியர்..வழக்கை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கிறிஸ்துதாஸ், மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென குமரி மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவிகள் இருவர், ஆசிரியருக்கு காதல் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதனைப்பார்த்த ஆசிரியர் கிறிஸ்துதாஸ், பெற்றோர்களை அழைத்து வருமாறு மாணவிகளிடம் கூறியதாகவும், பயத்தில் மாணவிகள் ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளதாகவும் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை விசாரணையில் கிறிஸ்துதாஸ் குற்றமற்றவர் என தெரியவந்திருப்பதாகவும், மூன்றாவது தரப்பினரின் தலையீட்டால் போலீசார் உரிய விசாரணை இன்றி கிறிஸ்துதாஸை கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர்கள், அவர் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.