பிரசவத்திற்கு சென்ற பெண் திடீர் மரணம் - ஆத்திரத்தில் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்
சேலத்தில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்த நிலையில், கோபத்தில் தனியார் மருத்துவமனையை சேதப்படுத்திய, பெண்ணின் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
கடந்த 3ம் தேதி, ரேவதி என்ற பெண், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு 4ம் தேதி அறுவை சிகிச்சை மூலம், ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, ரேவதிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் தான், ரேவதி இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், ரேவதியின் உடலை அடக்கம் செய்துவிட்டு, தனியார் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், அவரது மருத்துவ அறிக்கையை கேட்டுள்ளனர்.
அப்போது, மருத்துவமனை நிர்வாகத்திற்கும், ரேவதியின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கண்ணாடி, இருக்கைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், ரேவதியின் தந்தையான சேட்டு, உறவினர்கள் மதன், ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.