திருட்டில் ஒரு சின்ன செண்டிமெண்ட்...!வீடு வாடகைக்கு கேட்பது போல் கைவரிசை - சிசிடிவியில் மாட்டாத திருடர்கள்.. சிக்கியது எப்படி
சென்னை ஈக்காட்டுதாங்கல் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்த சொர்ணாதேவி என்பவர், தனக்கு சொந்தமான 10 வீடுகள் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.
மூதாட்டியின் வீட்டிற்குள் சென்ற 2 இளைஞர்கள், வீடு வாடகை கேட்டு பேசியுள்ளனர். அப்போது, திடீரென அறைக்குள் மூதாட்டியை தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி, கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர் அந்த இளைஞர்கள்.
பின்னர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 8 சவரன் தங்க நகைகளை பறித்த அவர்கள், சட்டென மூதாட்டியின் காலில் விழுந்து, பணத் தேவைக்காக கொள்ளை அடிப்பதாகக் கூறி பாவமன்னிப்பு கேட்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர்.
சோர்வுற்ற நிலையில் இருந்த மூதாட்டி, மெதுவாக எழுந்து வந்து, வீட்டின் கதவைத் திறந்து, அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
தகவலின் பேரில் வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 2 இளைஞர்கள் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு, சர்வ சாதாரணமாக செல்வது தெரியவந்தது. சிசிடிவியில் பதிவான உருவத்தை வைத்து, பழைய குற்றவாளிகளின் புகைப்படத்தோடு ஒப்பிட்டபோது, எதுவும் சிக்காததால், போலீசார் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர், கொள்ளை நடந்த நேரத்தில், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், சந்தேகத்திற்கிடமான செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது, கொள்ளையர்கள் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக கோவை விரைந்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அஜித், பிரபு ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைதான இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அஜித்தின் தாய், காச நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், பி.பார்ம் பட்டதாரியான அஜித்திற்கு போதிய வருமானம் இல்லாததால், தாயின் மருத்துவ செலவிற்காக, நண்பர் பிரபுவுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் கூறினார்.
பின்னர், பிரபுவிடம் நடத்திய விசாரணையில், காதலித்து வந்த பெண், தன்னிடம் பணம் இல்லாததன் காரணமாக, வேறொருவரை திருமணம் செய்ததாகவும், தற்போது விவாகரத்தாகி தனிமையில் இருக்கும் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க, பணம் சம்பாதிக்கும் நோக்கில் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார்.
அவர்கள் அளித்த விளக்கம் சினிமா கதை போல இருந்த போதிலும் இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். உழைத்து முன்னேற வழிகள் ஆயிரம் இருக்க இதுபோல் திருட்டில் சிக்கியதால் இளைஞர்கள் 2 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது..