பணி ஓய்வு பெறும் நாளில் தபால்காரர் தூக்கிட்டு தற்கொலை - சிக்கிய கடிதம்..திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் அருகே, ஓய்வுபெறும் நாளில் தபால்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமதிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த ராவணன், தாழக்குடி அஞ்சலகத்தில், தபால்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பணி ஓய்வு பெறும் நாளில், தனது வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், ராவணன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், சூரனூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டெல்லிபாபு, தமது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால், இதுவரை வேலைக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும் ராவணன் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர் டெல்லிபாபு மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.