புதுச்சேரியில் காரில் பயணம் செல்லும் போது தனக்காக போக்குவரத்து சிக்னல்களை நிறுத்த வேண்டாம் என முதல்வர் ரங்கசாமி காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் அவர் காரில் செல்லும் போது சிக்னலில் நின்று சென்றார்.
நேற்று மாலை அவ்வாறு சாலையில் செல்லும் போது தனக்காக மக்கள் வெயிலில் காத்திருப்பதைக் கண்ட அவர், இனி பொதுமக்களை தனக்காக சிரமப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் தான் வரும் பாதையை போக்குவரத்து சிக்னலில் உள்ள காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்த நிலையில், இன்று ராஜூவ் காந்தி சதுக்கம் அருகே காரில் வந்த போது சிக்னல் போடப்பட்டிருந்ததால் மக்களோடு காத்திருந்து சென்றார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் இதே பாணியைத் தொடர்ந்து வருகிறார்.