ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை - ரூ.100 கோடியுடன் எஸ்கேப் ஆன ஆசாமி
ஓமலூரை அடுத்த சேப்பெருமான் கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் தொடங்கி, அதிக வட்டி தருவதாக கூறி, முதலீட்டார்களிடம் பணம் வசூலித்துள்ளார். தொடக்கத்தில் வட்டித்தொகையை சரியாக திருப்பிக் கொடுத்ததால், அதை ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வட்டித்தொகை வராததால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள், நாகராஜை தொடர்பு கொண்டபோது, அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேரடியாக ஓமலூரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்று விசாரித்த போது ஒரு வாரமாக வீடு பூட்டி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நாகராஜை பல இடங்களில் தேடிவந்தனர். 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டு தலைமறைவான அவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவருடைய வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.