"ஒரு வேளை சோற்றுக்காக, அடி உதை" கருணையில்லா 'கருணை இல்லம்' - முதியோரின் கண்ணீர் கதை

Update: 2022-10-12 12:36 GMT

"ஒரு வேளை சோற்றுக்காக, அடி உதை" கருணையில்லா 'கருணை இல்லம்' - முதியோரின் கண்ணீர் கதை

வேலூர் மாவட்டம் குகையநல்லூரில் கருணை இல்லத்தில் முதியோர் அடித்து துன்புறுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்று தற்போது பார்க்கலாம்.

(இப்போ உங்களை யாராவது வந்து அழைத்து கொண்டு சென்றால் போக தயாரா? என ரிப்போர்டர் கேட்பது.. பெரியவர் ஆம் என கையெடுத்து கும்பிட்டு பதிலளிக்கும் காட்சி)

இப்படி தன்னை கைவிட்டவர்கள் என தெரிந்தும் கூட என்றாவது ஒரு நாள்.. தங்களை தன்னருகில் வைத்து பார்த்து கொள்ள தங்கள் குடும்பம் முன்வராதா ? என ஏங்கும் உள்ளங்களின் பல சோக கதைகள் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் இடம் தான், இந்த கருணை இல்லம்

தனது விருப்பு வெறுப்புகளை தள்ளிவைத்துவிட்டு, குழந்தையே கதி என வாழ்ந்து ஓய்ந்த பெற்றோர் ஒருபுறம்... இன்னொருபுறம் இறைவன் செய்த சதியால் மனநலம் குன்றி, எவ்வளவு வயதானாலும் மாறாத குழந்தை உள்ளம் கொண்ட மாற்றுத்திறனாலிகள்... இப்படி இங்கு இருந்த ஒவ்வொரு வருக்குள்ளும் பல தீராத வலிகள் சொல்லும் கதைகள் ஏராளம்!

தங்களை பாரம் என நினைத்து உறவுகள் ஓரங்கட்ட... கைவிடப்பட்டோருக்கெல்லாம் ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என கருணை இல்லம் கைகொடுக்க.. கிடைத்த உதவியை நாடி சென்றவர்களின் இன்றைய நிலை தான் பரிதாபத்தின் உச்சம்.

பாதிக்கப்பட்ட முதியவர்

"உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி 12 பேரை கொன்றுவிட்டனர்"

"செங்கல்பட்டு இல்லத்திற்கு எடுத்து சென்று எரித்துவிடுகிறார்கள்"

இப்படி சித்ரவதைக்கு ஆளானோரின் கண்ணீர் கதை அரசு துறை அதிகாரிகளின் காதுகளுக்கு சென்றடைய.. உடனடியாக வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி அங்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விசாரணையில் தாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என தெரியவரவே... அங்கிருந்த 69 பேரில் 32 பெண்கள் உட்பட 61 பேரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்த இல்லத்தில் 8 பேர் மட்டும் தங்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்போடு கண்காணித்து வரும் அதிகாரிகள், அவர்களையும் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்த கருணை இல்லத்தின் மேற்பார்வையாளராக இருக்கும் பாதிரியார் தாமஸ் என்பவரும், பொறுப்பாளர் சாந்தி என்பவரும் இந்த இல்லத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே செயிண்ட் ஜார்ஜ் என்ற இந்த கருணை இல்லத்தின் கிளைகள் பலவும், கடந்த 2017ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற ஆணை பெற்று மீண்டும் இந்த இல்லத்தை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்