OLX-ல் தில்லாலங்கடி வேலை..."இனி பழசு வாங்கினா ஜாக்கிரதையா இருங்க.." - வண்டி புதுசு... ஆனா அது பழசு..

Update: 2023-05-18 11:00 GMT

எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளில் ஒன்று, தங்களுக்கென்று ஒரு சொந்தமாக ஒரு இருசக்கர வாகனம் இருக்க வேண்டும் என்பது. அந்த இருசக்கர வாகனம் திடீரென்று காணாமல் போனால் என்னாகும். அப்படித்தான் வடசென்னையில் பலர் தங்கள் இருசக்கர வாகனங்களை இழந்தார்கள்.

வடசென்னைக்கு உள்பட்ட முத்தியால்பேட்டை, யானை கவுனி, பூக்கடை, பேசின் பாலம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் காணாமல் போவதாக, காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க எந்த தடயமும் கிடைக்காமல் இருந்தது. அப்போதுதான், பூக்கடை காவல் நிலைய துணை ஆணையர், யானைகவுனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், ஓரிடத்தில் புதிதாக வாங்கி வந்த பல்சர் வாகனம் காணாமல் போனதை வைத்து சந்தேகம் அடைந்த போலீசார் முத்தியால்பேட்டை காவல் எல்லைக்குப்பட்ட CCTV கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றது, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரதீஸ்குமார் என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் அவரின் பின்னணி சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆம், அவர் மீது கொலை வழக்கு உள்பட 10-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் ஒரு வழியாகத் தேடி கைது செய்து, விசாரணையைத் தொடங்கினார்கள்.

இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பதற்கு பல நூதன வழிமுறைகளை ரதீஷ் குமார் கையாண்டது அப்போது தெரியவந்து. முதலில், OLX இணையதளம் மூலம் மிகவும் பழைய இருசக்கர வாகனத்தை குறைந்த விலைக்கு வாங்குவார். வண்டியா முக்கியம், அதன் ஆவணங்கள்தான் முக்கியம். பிறகு புதிதாக ஒரு இருசக்கர வாகனத்தை திருடி வந்து, பழைய வாகனத்தின் ஆவணங்களில் திருத்தம் செய்து, OLX இணையதளம் மூலமாக விற்று விட வேண்டும். இதுதான், ரதீஷ் குமார் கையாண்ட தொழில் ரகசியம். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள், வேலூரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடேஷும், விஷ்ணுவர்தனும். அவர்கள் இருவரையும் பூக்கடை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருடிய வாகனங்களை விற்கும்போது, வாங்க வருபவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, பழைய வாகனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்களை வைத்து, போலி ஆவணம் தயாரித்து, அதற்கு ஏற்றார்போல் வாகனத்தின் சேசிங் எண்ணை மாற்றி விடுவார்கள். திருடிய இருசக்கர வாகனங்களின் பாகங்களை மாற்றி மாற்றி, இருசக்கர வாகனங்களின் உரிமையாளரே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போலீசார், முதல்கட்டமாக, வடசென்னை பகுதிகளில் காணாமல்போன 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கைதான மூன்று பேரும் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.பொதுமக்கள், இணையதளம் மூலம் இருசக்கர வாகனங்களை வாங்கினால், RC புத்தகத்தில் உள்ள எண்ணும், வாகனத்தில் உள்ள எண்ணும் ஒன்றாக உள்ளதா அல்லது திருட்டு வாகனமா என்று நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்