தூங்கிக் கொண்டிருந்த முதியவர் வெட்டிக்கொலை... குடும்ப தகராறு கொலையில் முடிந்த பயங்கரம்...?
நைட்டு நல்லா பேசிட்டு தூங்க போனவரு காலையில கத்தி குத்து காயங்களோட பிணமா கிடந்திருக்காரு. மகள், மருமகன், சொத்து தகராறுனு விரியுது அந்த வழக்கோட விசாரணை.
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியில் உள்ளது கலைஞர் நகர்.
வழக்கமாகக் காலை விடிந்ததும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் அந்த பகுதி அன்று அச்சத்தில் முடங்கிக் கிடக்கிறது.
அங்குள்ள ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்த வாகனம் , விவசாய நிலத்திற்கு அருகே உள்ள ஒரு குடிசை வீட்டின் முன்பாக வந்து நின்றது.
அங்கே ரத்த வெள்ளத்தில் சடலமாக் கிடந்த ஒரு முதியவரின் உடலை கைபற்றிய போலிசார், பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
கொல்லப்பட்டவர் 62 வயதான முதியவர் செல்வம்,
திருமணமாகி மனைவி பிள்ளைகளோடு இதே பகுதியில் வசித்து வந்திருக்கிறார்.
தள்ளாத வயதிலும் தென்னந்தோப்பில் தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று இரவு வழக்கம் போல வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவர், இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு அருகே இருக்கும் ஒரு கொட்டகையில் தூங்கச் சென்றிருக்கிறார். ஆனால் அது தான் செல்வத்தின் கடைசி தூக்கம் அதன் பிறகு அவர் விழிக்கவே இல்லை.
காலையில் அந்த வழியாகச் சென்ற ஊர் மக்கள் அந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
இரவு தூங்கச்சென்ற செல்வம் மறு நாள் காலையில் படுத்திருந்த பாய் முழுவதும் குருதி வெள்ளம் கொப்பளிக்க இறந்து கிடந்திருக்கிறார்.
உடனே காவல் நிலையத்திற்கு தகவல் பறந்திருக்கிறது. சம்பவ இடத்தில் கிடந்த செல்வத்தின் உடலை ஆராய்ந்த போது, பலமான வெட்டுக் காயங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
உடனே வழக்குப் பதிவு செய்த போலிசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கி இருக்கிறார்.
கூலி வேலை செய்து வந்த செல்வத்திற்கு யார் எதிரிகள் என்று சல்லடை போட்டுச் சலித்த போது தான், போலிசாரின் சந்தேக பார்வை செல்வத்தின் குடும்ப உறுப்பினர் மீதே திரும்பி இருக்கிறது.
செல்வத்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள். அதில் மகள் ஜெயலட்சிமியை உள்ளூரிலேயே பிரபாகரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
என்னதான் மகளைக் கட்டிக் கொடுத்திருந்தாலும், செல்வத்திற்கும் அவரது மருமகனுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் தான் ஒரு நிலபிரச்சனை மாமனார் மருமகன் சண்டையை இன்னும் ஊதிப் பெரிதாக்கி இருக்கிறது.
செல்வத்தின் பரம்பரை சொத்தாக வீட்டிற்கு அருக்கிலேயே கொஞ்சம் நிலம் இருந்திருக்கிறது. அந்த நிலத்தில் பிரபாகரன் தன்னுடைய தேவைக்காக ஒரு கால்வாயை அமைத்திருக்கிறார். ஆனால் மருமகன் தன்னைக் கேட்காமல் நிலத்தில் கைவைத்தது, செல்வத்திற்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. இதனால் பிரபாகரனிடம் அடிக்கடி வாக்கு வாதம் செய்திருக்கிறார்.
சம்பவம் நடப்பதற்கு முன்தினம் இரவும், கால்வாய் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. கடுமையாக வார்த்தைகளால் மோதிக் கொண்ட இருவரையும் ஊர் மக்களும் குடும்பத்தாரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் செல்வம் மறு நாள் காலையில் வெட்டுக் காயங்களோடு இறந்து கிடந்திருக்கிறார்.
இதனால் செல்வத்தின் மருமகனான பிரபாகரன் மற்றும் மகள் ஜெயலட்சுமியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
போலிசாரின் முழு விசாரணைக்கு பிறகே இந்த கொடூர சம்பவத்தின் முழுப்பின்னனியும் வெளியே வரும்.