"இந்தியா-சீனா இடையே சண்டை மூட்ட முயலும் நேட்டோ" - ரஷ்ய அமைச்சர் பகிர் குற்றச்சாட்டு
இந்தியா சீனா இடையே பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது.
அமெரிக்காவால் வழிநடத்தப்படும் ராணுவ அமைப்பான நேட்டோ ஏற்கனவே விரிசல் அடைந்துள்ள இந்தியா - சீனா இடையிலான உறவில் கூடுதல் பிரச்சினைகளை உருவாக்க முயல்வதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தோ - பசிஃபிக் கருத்தில் நேட்டோ தன்னை பிரிக்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நேட்டோவின் எல்லை என்பது ஐரோப்பிய கண்டம் மட்டுமல்ல என்றும், உலகம் முழுவதும் தங்கள் பங்கு உள்ளதாக அவர்கள் அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆசிய பசிஃபிக் பிராந்தியம் என்பதை இந்தோ பசிஃபிக் பிராந்தியம் என்றழைக்கும் நேட்டோ, சீனா இந்தியா இடையே கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த இந்தியாவைத் தூண்ட முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.