கற்பை நிரூபிக்க ஆணுக்கு 'அக்னி பரீட்சை'... திருமணமான பெண்ணுடன் தகாத உறவு...
- தனது கற்பை நிரூபிக்க சீதைக்கு அக்னி பரீட்சை நடப்பட்டது அந்த காலம் என்றால்... நவீன காலத்தில் இங்கொரு ராமருக்கு அக்னி பரீட்சை நடத்தப்பட்டிருக்கிறது.
- தெலங்கானாவின் பஞ்சரப்பள்ளி கிராமத்தில் தான் இந்த கொடுமை அரங்கேறியிருக்கிறது. இத்தனைக்கும் தனது கணவர் ஏகபத்தினி விரதன் என ஊர் பஞ்சாயத்தில் வாதாடியது மட்டுமின்றி, தற்போது தனது கணவர் களங்கம் இல்லாதவர் என காவல் நிலையத்தின் கதவையும் தட்டியிருக்கிறார், இவரது அன்பு மனைவி.
- அக்னி குண்டத்தை மூன்று முறை சுற்றி வருவது போல் சுற்றுகிறாரே இவரது பெயர் தான் கங்காதர்.
- வேறொருவர் மனைவி மீது இவருக்கு தகாத உறவு இருப்பதாக ஊர்ப்பஞ்சாயத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... புகார் அளித்தவர் அந்தப் பெண்ணின் கணவர். தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கத்தான் இந்த சோதனைக்கு ஆளாகியிருக்கிறார், கங்காதர்.
- நெருப்பு கங்கில் கிடக்கும் இரும்பு கம்பியை, வெறும் கையால் எடுத்து அந்த பக்கம் போட வேண்டும்... அப்படி போடும் போது கை சுடாவிட்டால் அவர் குற்றமற்றவர் என்றும்.. சுட்டுவிட்டால் அவர் குற்றவாளி என்பதும்தான் இங்கே ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ்.
- நெருப்பென்றால் சுடாமலா இருக்கும்? கங்காதருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததோ இல்லையோ... பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை தொடர்பு கொண்டதுமே அவரது கை வெந்துவிட்டது. அதனால் அவரை குற்றவாளி என முடிவு செய்த கணம் பஞ்சாயத்தார் 11 லட்சம் அபராதத்தை விதித்திருக்கிறார்கள்.
- இதனால் காவல்நிலையத்தின் கதவை தட்டி நியாயம் கேட்டிருக்கிறார், கங்காதரின் மனைவி. ஆனால் ஊர் பஞ்சாயத்தின் பெரிய தலைகளோ... இது தங்களின் பாரம்பரிய வழக்கம் என்றும்... பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு உட்படுவதாக கங்காதர் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறி... விடாபடியாக நிற்கின்றனர். இது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது, காவல்துறை.
- நவீன உலகம் எவ்வளவோ வளர்ந்து விட்ட பிறகும்... "இதோ சொல்லிப்போட்டேன்டா தீர்ப்பு" என்பது போல இப்படிப்பட்ட சில பஞ்சாயத்துகளும் நடந்து கொண்டிருப்பது வேதனையான வேடிக்கைதான்.