மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 19 மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 1.12.2019-ஆம் தேதியன்று பெறும் ஊதியத்தில் இருந்து 6 சதவீதம் உயர்வு வழங்குவது என்று உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த ஊதிய உயர்வின் மூலம் 75 ஆயிரத்து 978 பேர் பயன்பெறுவார்கள். இதேபோல், 1.12.2019-ஆம் தேதியன்று 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பணிப் பலனாக 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் 62 ஆயிரத்து 548 பேர் பயன்பெறுவார்கள். இந்த ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 527 கோடியே 8 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.