திருடனான மெக்கானிக்கல் இன்ஜினியர்! - வண்டி ஓனர் யார்? திணறும் போலீஸ்

திருடு போனது நம்முடைய வண்டியே ஆனாலும் அதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாற்றம் செய்து விற்று வந்த பலே திருடனை போலீசார் பொறி வைத்து பிடித்ததன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Update: 2022-06-18 17:24 GMT


சென்னை போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டூவீலர்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.


இதன்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை பிடிக்க பொறி வைத்து போலீசார் காத்திருந்தனர். அப்போது போரூரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை டிப் டாப் உடையணிந்த ஆசாமி ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது.


அந்த நபர் யார்? என போலீசார் விசாரித்த போது கடந்த 2019ல் வில்லிவாக்கத்தில் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த ரமேஷ் என தெரியவந்தது. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது டூவீலரை நேக்காக திருடுவது எப்படி? என ரமேஷ் சொன்ன பதில் போலீசாரையே கிறுகிறுக்க வைத்தது... அயனாவரத்தை சேர்ந்த ரமேஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர். வாகனங்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார்.


பறிமுதல் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆன ரமேஷ், அந்த வேலையை விட்டு விட்டு டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளார். 2019ல் வில்லிவாக்கத்தில் டூவீலர்களை திருடி சிக்கியதால் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அதுவே ஒரு பாடமாகவும் மாறியிருக்கிறது.


செய்றது நாம தான்.. ஆனா யாருக்கும் தெரியவே கூடாது என நினைத்த அவர், நூதனமான டூவீலர் திருட்டில் ஈடுபட்டார். உபயோகமற்ற பழைய வாகனங்களை வாங்கும் ரமேஷ், அதனை எடைக்கு போட்டு விடுவார்.. பின்னர் அந்த வாகனத்தின் ஆர்சி புக் நகலை வாங்கி வைத்துக் கொள்வார்...


பின்னர் எந்த மாடல் வண்டியை பழசு என வாங்கினாரோ அதே மாடல் வண்டியை தேடித் தேடி திருடி உள்ளார். பின்னர் ஏற்கனவே கைவசம் உள்ள ஆர்சி புக்கில் உள்ள நம்பரை திருட்டு வாகனத்தில் மாற்றிக் கொள்வார்.


பழைய ஆர்.சி. புக்கில் உள்ள என்ஜின் நம்பர் உள்ளிட்டவற்றை இதில் குறிப்பிட்டு புது வாகனம் போலவே மாற்றி அதை குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு கோயம்பேட்டை சேர்ந்த மெக்கானிக் செல்வம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.


ரமேஷின் இந்த இன்ஜினியரிங் மூளையால் வண்டியின் ஓனரே வந்தாலும் தன்னுடைய வண்டி இதுதான் என கண்டுபிடிக்கவே முடியாது. இப்படியாக கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு டிப் டாப் ஆன உடைகளில் உலா வந்து வாகனங்களை அபேஸ் செய்வார்.


கையில் கொத்தாக டூப்ளிகேட் சாவிகளை வைத்துக் கொண்டு சுற்றி வரும், அதில் எந்த சாவி வண்டியில் பொருந்துகிறதோ அதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். குறைந்த விலையில் வாகனம் கிடைக்கிறது என நம்பி பலரும் இவரிடம் வண்டியை வாங்கி உள்ளனர்.


இப்படியாக ஏராளமான வாகனங்களை விற்றதும் உறுதியான நிலையில் ஏதோ பார்க்கிங் ஏரியா போல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 42 திருட்டு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இந்த வாகனங்களின் நம்பர் பிளேட், இன்ஜின் நம்பர்களும் மாற்றப்பட்டுள்ளதால் இதன் உரிமையாளர்கள் யார் என கண்டறிவது போலீசாருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.





Tags:    

மேலும் செய்திகள்