பீடி, சிகரெட்டுக்கு லைசென்ஸ் கட்டாயம்.. தமிழகத்தில் அமலாகிறது புது ரூல்ஸ்.. புகைப்போருக்கும் ஆப்பு.. விற்போருக்கும் ஆப்பு

Update: 2023-06-02 04:01 GMT

தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்க உரிமம் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு

புகை நமக்கு பகை... புகை பிடிக்காதீர்கள் என்ற விளம்பரம் சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையில் இடம்பிடிக்கிறது. ஆனால் தீங்கை விளக்கும் விளம்பரங்களை கேலிசெய்யும் வாசகமாக மாற்றி புகைப்பவர்கள் புகைத்துக் கொண்டே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறந்தாலும் அசால்டாக பீடி, சிகரெட்களை புகைத்து தன்னையும், தன்னை சுற்றியவர்களையும் கருக்கி வருகிறார்கள்.

இதில் பெரியவர்கள், இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறார்களும் பெண்களும் புகையைவிட்டு எமனை வேகமாக இழுப்பது கொடுமையிலும் கொடுமை...

ஆஸ்துமாவில் ஆரம்பித்து நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் அடைப்பு, வாய் புற்றுநோய் வரையில் பலநோய்கள் புகைப்பதால் வருகிறது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்

புகைப்பவர்களால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதத்துக்கு புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.

இதனை தடுக்க தீவிரம் காட்டும் மத்திய, மாநில அரசுகள் புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன. அந்த வகையில் இதுதொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதனை ஏற்று உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட்களை விற்பதற்கு மட்டும் தனி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த விதிமுறை தமிழகத்திலும் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி தமிழகத்தில் பெட்டிக் கடைகள், சிறிய மளிகை கடைகள், தேநீர் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட்கள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இனி பீடி, சிகரெட்களை விற்க வேண்டும் என்றால் அதற்கான உரிமத்தை பெற வேண்டும் என்ற விதிமுறையை சுகாதாரத்துறை அமலுக்கு கொண்டு வருகிறது. இப்படி பீடி சிகரெட் விற்கும் கடைகளில் வேறு பொருட்களை விற்க கூடாது என்ற மற்றொரு கட்டுப்பாட்டும் இதனுடன் வருகிறது.

சிறுவர்கள், குழந்தைகள் மத்தியில் புகைப் பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னா் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கபட உள்ளது.

இந்த நடவடிக்கையால் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. விரைவில் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்