இன்ஸ்டாகிராம் மூலம் வேகமாக மலர்ந்த காதல்...வேகமாக பிரிந்த உயிர்...

Update: 2023-01-29 22:11 GMT

வேலூர் அருகே உள்ள பாலமதி மலை உச்சியில், 'குழந்தை வேலாயுதபாணி' கோயில் உள்ளது.

இந்த மலை உச்சியில் இருந்து 100 அடி கீழே இருக்கும் பாறை இடுக்குகளில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டனர்.

கட்டையால் முகம் மற்றும் தலையில் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், பாட்டிலால் கழுத்தை குத்திக் கிழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

முகம் வீங்கி அடையாளம் காண முடியாதபடி இருந்ததால், இறந்து கிடந்த பெண் யார் என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறினர்.

பின்னர் அங்கிருந்த போலீசார், பெண்ணின் உடலை சோதனையிட்ட போது, ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், கொலை செய்யப்பட்ட பெண், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 23 வயதாகும் குணப்பிரியா என தெரியவந்தது.

இன்ஸ்டாகிராம் மூலம் வேலூரை சேர்ந்த கார்த்தி என்பவருடன் குணப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் காதலித்து, கடந்த ஆண்டு காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணத்தை இருதரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நண்பனின் வீட்டில் குணப்பிரியாவும், கார்த்தியும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

குணப்பிரியா 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கார்த்தி வேலைக்கு எதுவும் செல்லாமல், ஊதாரித்தனமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சாப்பிடக் கூட வழியில்லாததால் விரக்தி அடைந்த குணப்பிரியா, கார்த்தியுடன் வாழ்வதற்கு சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு கார்த்தி மட்டுமே காரணம் என போலீசார் மீட்ட கடிதத்தில் இருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கார்த்தி, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளரின் மகன் என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கார்த்தியை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர் போலீசார்.

அதில், நண்பனின் வீட்டில் தங்குவதற்கு தயங்கிய குணப்பிரியா , வாடகைக்கு வீடு எடுக்குமாறு கார்த்தியிடம் கூறியதாகவும், வாடகை கட்டும் அளவிற்கு பணம் இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனிடையே, மனவேதனையில் இருந்த குணப்பிரியா, கடலூர் குள்ளஞ்சாவடியில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றுவிட்டு, கடந்த 25ம் தேதி மீண்டும் வேலூருக்கு கிளம்பி வந்துள்ளார்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த குணப்பிரியாவை, இருசக்கர வாகனத்தில் கார்த்தி அழைத்துச் சென்றுள்ளார்.

போகும் வழியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, குணப்பிரியாவை கொலை செய்ய திட்டமிட்ட கார்த்தி, பாலமதி மலை உச்சியில் உள்ள முருகன் கோயில் அருகே, மறைத்து வைத்திருந்த கத்தியால் குணப்பிரியாவின் கழுத்தில் குத்தி, கட்டையால், முகம் மற்றும் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் கொலையை மறைக்க, மலை உச்சியில் இருந்து உடலை கீழே தள்ளி, ஒன்றும் தெரியாததுபோல கார்த்தி அங்கிருந்து சென்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது..

இன்ஸ்டாகிராம் மூலம் வேகமாக மலர்ந்த காதல், வேகமாக நடந்த கல்யாணம், இறுதியில் வேகமாக பிரிந்த உயிர்... பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்